எத்தகைய அறிவிப்புமின்றி ஜப்பானில் எப்படி சுனாமி சூறையாடியதோ அதே போன்று தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு எதிராக, காங்கிரசின் நிழல் ஆதிக்கத்திற்க்கு எதிராக மக்கள் திரண்டு, அ.தி.மு.க. வினரே எதிர்பாராத வண்ணம் மிகப் பிரமாண்டமான வெற்றியினைத் தந்துள்ளனர். இது அ.தி.மு.க.வினருக்கு கிடைத்த வெற்றி எனக் கூறுவதை விட மக்கள் கொடுத்த வெற்றி என்பதே பொருத்தமாக இருக்கும். கடந்த 1991, 2001ம் ஆண்டுகளில் சசிகலா & கோ வினரின் ஆதிக்கத்தில் தமிழகத்தில் புரிந்த தவறுகளை இம் முறை நிச்சயம் புரிய நம்பமாட்டார் எனும் நம்பிக்கையில் கற்றறிந்தோரும், தமிழுணர்வாளர்களும், இளையதலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்து உள்ளனர்.
5ம் ஆண்டும் நமதே எனும் மமதையின்றி தமிழகத்தினை திறம்பட நடத்திட. ஈழத் தமிழர்களுக்கு உதவிட நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் ஜெயலலிதாவின தாத்தா குடும்பமும். இவரது அன்னை சந்தியாவும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஜெயலலிதா எம். ஜி. யாருடன் நடித்தபோது அவரது இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார். பின்னர், அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு பிறகு 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989 முதல் 1991வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார். 2011 இல் தமிழக முதல்வராக 3 வது முறையாக தேர்வாகிய உள்ள இவர் தமிழகத்தின 16வது முதல்வராவார்.
சொ.கருப்பசாமி
கால்நடை துறை அமைச்சரான சொ.கருப்பசாமி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பி.யூசி. படித்து உள்ளார்.
அவருடைய மனைவி முத்துமாரி. மாரிச்சாமி என்ற மகனும், கீதாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
சி.சண்முகவேலு
தொழில்துறை அமைச்சரான சி.சண்முகவேலு, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ. படித்துள்ள இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் சமராயபட்டியைச் சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர்.
இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும், ராஜ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
சி.வி. சண்முகம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு வயது 46. பி.ஏ.பி.எல். படித்துள்ளார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்த வாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சி.வி.சண்முகத்திற்கு கவுரி என்ற மனைவியும் ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும் வள்ளி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ஜெயபால்
மீன்வளத்துறை அமைச்சரான கே.ஏ.ஜெயபாலின் சொந்த ஊர் நாகப்பட்டினம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு தினேஷ், ரதீஷ், ரகுபாலன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர் பி.காம் வரை படித்துள்ளார். இவர் தற்போது நாகை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார்.
கே.டி.பச்சைமால்
தமிழக வனத்துறை அமைச்சரான கே.டி.பச்சைமாலின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம். இவருடைய தந்தை பெயர் தங்கநாடார். தாயார் கோவில்பிள்ளை அம்மாள்.
1979-ம் ஆண்டு அ.தி.மு.க. வில் இவர் சேர்ந்தார். 2000-வது ஆண்டில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பச்சைமால் பதவி வகித்தார். இவருடைய மனைவி பெயர் பி.செல்வழகி (43). இவர்களுக்கு பி.அபிஜித் (16), பி.அனிஜித்குமார் (14) என்ற மகன்கள் உள்ளனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
உணவுத்துறை அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 77-ல் கோவை வேளாண் கல்லூரியில் மாணவர் துணை செயலாளராகவும், 80-ல் மாணவர் செயலாளராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
கே.பி.முனுசாமி
உள்ளாட்சி துறை அமைச்சரான கே.பி.முனுசாமிக்கு வயது 59. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர். பி.ஏ.பி.எல். படித்துள்ளார். தந்தை பூங்காவன கவுண்டர், தாயார் மங்கம்மாள், மனைவி மங்கையர்கரசி, இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.
கே.வி.ராமலிங்கம்
பொதுப்பணித்துறை அமைச்சரான கே.வி.ராமலிங்கம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கள்ளிவலசு பகுதியை சேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரி.
கே.வி.ராமலிங்கத்திற்கு அம்மணி என்ற மனைவியும் மீனா பிரீத்தி, ஆர்த்தி பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், ரத்தன் பிருத்வி என்ற மகனும் உள்ளனர்.
எம்.சி. சம்பத்
ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிபெற்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மரியம்பிச்சை
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். இவர் பி.ஏ. வரலாறு படித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று மரியம்பிச்சை முதல் முதலாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பெயர் பாத்திமாகனி. மரியம் பிச்சைக்கு ஆசிக் மீரா (வயது30), ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்கள் உள்ளனர்.
நத்தம் விசுவநாதன்
மின்சாரத்துறை அமைச்சரான நத்தம் விசுவநாதனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி கிராமம். இவருக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா, ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 62 வயதான விசுவநாதன், பி.எஸ்சி. படித்துள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக உள்ளார்.
எஸ்.ஆர்.சிவபதி
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சிவபதி 1963-ல் பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஜெயசாந்தி, லட்சுமிபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
ந.சுப்பிரமணியன்
கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியில் 10.07.1956-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் நல்லான். பட்டயப்படிப்பு (டி.இ.இ.) படித்துள்ள சுப்பிரமணியன், சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவருடைய மகன் ராம்குமார் என்ஜினீயரிங்கும், மகள் லாவண்யா எம்.எஸ். ஐ.டி.யும் படித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம்
நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு வயது 60. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம் நகரசபை தலைவராகவும், நகர அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 6 மாத காலம் முதல்-அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திர நாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.
பி.பழனியப்பன்
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.பழனியப்பன் (வயது 50). தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தந்தை பெருமாள்கவுண்டர், தாயார் பொன்னியம்மாள், மனைவி ரோஜா. இவருக்கு எழில் மறவன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.
பி.தங்கமணி
தமிழக வருவாய் துறை அமைச்சரான பி.தங்கமணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். அவருக்கு வயது 51. பி.ஏ.பட்டம் பெற்றவர் ஆவார்.
இவரது தந்தை பெருமாள் கவுண்டர். தாயார் செல்லம்மாள். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பரனிதரண்(22) என்ற மகனும், லதாஸ்ரீ(20) என்ற மகளும் உள்ளனர்.
இடைப்பாடி பழனிசாமி
நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான இடைப்பாடி பழனிச்சாமி, சொந்த ஊர் இடைப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ.படித்துள்ளார்.
புத்திசந்திரன்
சுற்றுலா துறை அமைச்சரான எம்.புத்திசந்திரன், 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் கே.பி.மாதாகவுடர். படுகர் சமுதாயத்தை சேர்ந்த இவரது பூர்வீகம் மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை. புத்திசந்திரன் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், முகிலா, அனு ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
பி.வி.ரமணா
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான பி.வி.ரமணாவுக்கு வயது 44. இந்து கம்மவார் சமுதாயத்தை சேர்ந்த இவர் பி.எஸ்சி, பி.பார்ம் படித்தவர். இவரது தந்தை பக்தவச்சலம். தாய் பிரேமா.
இவருக்கு லதா என்ற மனைவியும், வருணிஷா என்ற மகளும் உள்ளனர்.
ஆர்.பி.உதயக்குமார்
தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஆர்.பி.உதயக் குமாரின் தந்தை பெயர் போஸ். ஆர்.பி. உதயக்குமார் பி.காம் பி.எல்., எம்.எஸ்.டபிள்ï. படித்துள்ளார். மனைவி தாமரைச்செல்வி. 2 மகள்கள் உள்ளனர். முதன் முதலில் மதுரை அரசு சட்டக்கல்லூரி அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராக இருந்தார். அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இப்போதுதான் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.வைத்திலிங்கம்
வீட்டுவசதித்துறை அமைச்சரான ஆர்.வைத்திலிங்கத்தின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு. இவருக்கு தங்கம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பி.ஏ. பட்டதாரி. 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
சி.த.செல்லப்பாண்டியன்
தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஏ. பட்டதாரியான இவர் தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் தொழில் செய்து வருகிறார்.
அவருடைய மனைவி இந்திரா. ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.
செல்லூர் ராஜு
கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு (வயது 57) மதுரை மேற்கு தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். காமாட்சி தேவரின் மகனான இவர் பி.எஸ்சி. பட்டதாரி. இவரது மனைவி ஜெயந்தி. 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
செல்வி ராமஜெயம்
சமூக நலத்துறை அமைச்சரான செல்வி ராமஜெயம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.
இவரது சொந்த ஊர் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் கிராமம் ஆகும். கணவர் ராமஜெயம். சந்தர் என்கிற மகனும், ஜெயஸ்ரீ, ஜெயப்பிரதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
கே.ஏ.செங்கோட்டையன்
விவசாய அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.
ஜி.செந்தமிழன்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான ஜி.செந்தமிழன், சென்னையைச் சேர்ந்தவர். வக்கீலான இவர், எம்.ஏ., எம்.எல். பட்டம் பெற்றவர். கட்சியில் தென் சென்னை மாணவர் அணி தலைவர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தென் சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவி லட்சுமி. மகள் சரண்யா, மகன் ஜெயஆதித்யன்.
கோகுல இந்திரா
தமிழக வணிக வரித்துறை அமைச்சரான எஸ்.கோகுலஇந்திராவின் சொந்த ஊர் ராமநாதபுரம். இவரது தந்தை சுப்பிரமணியன். பி.ஏ.பி.எல். முடித்த கோகுலஇந்திரா ஆரம்பத்தில் சிவகங்கையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். அதன்பின்பு அ.தி.மு.க.வில் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றினார். நடந்து முடிந்த தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கோகுலஇந்திரா-சந்திரசேகர் தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி
சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ. எம்.பில் படித்துள்ள இவர் கோவையை அடுத்த குனியமுத்தூரை சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்த இவர் குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.
எஸ்.பி.வேலுமணியின் மனைவி பெயர் வித்யா தேவி. இவர்களுக்கு விஷால் என்ற மகனும், வந்தனா என்ற மகளும் உள்ளனர்.
இசக்கி சுப்பையா
சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா என்ற இ.சுப்பையா, அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஏ., எம்.எல். படித்துள்ள இவர் நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர். தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி சொந்த ஊர். அவருடைய மனைவி மீனாட்சி. சித்த மருத்துவர். மகள் சந்திர காந்திமதி. எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகன் இசக்கித்துரை.
சின்னையா
பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரான தாம்பரம் சின்னையாவுக்கு வயது 48. பி.ஏ. பட்டதாரி. இவர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் பிறந்து வளர்ந்தது தாம்பரம்.
இவருக்கு சுமதி என்ற மனைவியும், ராகவேந்திரா என்ற மகனும் உள்ளனர். இவர் தாம்பரம் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து தேர்தலுக்காக அந்த பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
செந்தில் பாலாஜி
போக்குவரத்துத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவர் பி.காம். பட்டதாரி இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரபட்டியாகும். இவரது தந்தை பெயர் பி.வேலுசாமி. தாய் பெயர் பழனியம்மாள்.
இவருக்கு மேகலா என்ற மனைவியும், நந்தினி என்ற (5) மகளும் உள்ளனர். இவர் 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார்.
வி.எஸ்.விஜய்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.
டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.பி.சண்முகநாதன்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பண்டாரவிளையைச் சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருடைய மனைவி ஆஷா. ராஜா என்ற மகனும், புவனேசுவரி, கலையரசி, பொன்னரசி, தமிழரசி, பொன்ரேகா ஆகிய 5 மகள்களும் உள்ளனர்.
நன்றி: நக்கீரன் & தமிழ் விக்கிபீடியா.