
ஒரு முறை ஒருவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. வழக்கமாய் தான் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். டாக்டர் மருந்து, மாத்திரைகள் தந்திருக்கிறார். இவரும் தொடர்ந்து உட்கொண்டிருக்கிறார். ஆனாலும் பாருங்கள். உடல் குணமடையவே இல்லை. டாக்டர் - அவரை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் கூட அவரது காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை. காய்ச்சலுக்கான காரணத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை. வேறு சில டாக்டர்களும் வந்து பார்க்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.
அவரது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கிறார்கள். கடந்த சில மாதங்களாக, அவர் எங்கெல்லாம் சென்றார், அவரது நடவடிக்கை, என்ன மாதிரியான உணவை உட்கொண்டார் என்று ஆராய்கிறார்கள். சில வாரங்களுக்கு முன், அவர் சில வெளிநாட்டுகளுக்கு சென்றிருக்கிறார். வெளிநாட்டு சிதோஷ்ன நிலை மற்றும் அவரது சாப்பாடு என்று நிறைய விஷயங்கள் அலசப்படுகிறது. ஒவ்வாமை போன்ற எதுவும் வந்ததா என்று கேட்கிறார்கள். கடைசியில் கஷ்டப்பட்டு அவரது காய்ச்சலுக்கான காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள்.
அவர் வெளிநாடு சென்ற போது ஒரு விலங்கின் இறைச்சியை சாப்பிட்டிருக்கிறார். அந்த இறைச்சியை அரைவேக்காட்டில் எடுத்து விடுவார்களாம். அதன் காரணமாக அந்த வகை இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு லேசாக காய்ச்சல் வருவது இயற்கை தானாம். உடனடியாக அந்த நாட்டு மக்கள் மாத்திரை உட்கொண்டு விடுவார்கள். இவருக்கு அது தெரியாது. சில தினங்களில் சென்னைக்கு வந்து விட்டார். காய்ச்சலும் வந்துவிட்டது. காய்ச்சலுக்கான காரணங்கள் தெரியாமல் குழப்பங்கள்.

மனித வாழ்வின் பிரச்சனைகளுக்கு, குழப்பங்களுக்கு இரண்டே காரணி. ஒன்று நம் அறியாமையால் "நமக்கு நாமே" என்பது போல - நம்மாலேயே ஏற்படுத்தி கொள்ள்ப்படுவது. அடுத்தது பிறரது செய்கையால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்... அதனால் ஏற்படும் குழப்பங்கள்... பிறரால் நமக்கு நிகழும் சங்கடங்களுக்கு முன், நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சங்கடங்களை பார்ப்போமா?
எதற்கெடுத்தாலும் குழப்பம் அடைகிறவரும், எதற்குமே குழப்பம் அடையாதவரும் அருகருகே தான் வசிக்கிறார்கள் என்பது ஆச்சர்யப்பட தக்க உண்மை. அவர்கள் கணவன் மனைவியராக வாழ்கிறார்கள்... நண்பர்களாக இருக்கிறார்கள்... அப்பா பிள்ளைகளாக கூட இருக்கிறார்கள். ஒருவரால் குழப்பமில்லாமல் வாழ முடிகிறது... மற்றவரால் ஏன் அவ்விதம் வாழ முடியவில்லை... பார்ப்போமா?
எந்த ஒரு விஷயத்திற்கும் - நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்த அளவுக்கு அது வீரியமானதாகவோ அல்லது வீரியமற்றதாகவோ ஆகிறது. அடிபடுகிறது. சின்னதாக பேண்டேஜை போட்டு கொண்டு தங்கள் வேலைகளை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். "அய்யோ எனக்கு அடிபட்டுடுச்சே" என்று அந்த காயம் ஆறுகிறவரை புலம்பி தவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.
குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் இரண்டு வகையாக உள்ளன. உண்மையிலேயே அவை பிரச்சனையை தரக்கூடிய விஷயம் தானா அல்லது நமது அறியாமையால் - அதை பிரச்சனைக்குரியதாக கருதுகிறோமா என்று பார்த்தாலே குழப்பத்திற்கு சிறிய விடிவு கிடைக்கும். அடுத்து என்ன செய்வது. குழப்பத்திற்கான காரணிகளை தேடி கண்டு பிடியுங்கள்.

சில நேரங்களில் உங்களை ஆழ்த்தும் குழப்பங்களிடம் சவால் விடுங்கள். குழப்பங்கள் உங்களை ஜெயிக்கிறதா அல்லது நீங்கள் குழப்பத்தை ஜெயிக்கிறிர்களா என்று. போட்டி என்று வரும் போது மனம் இயல்பாகவே போராட துவங்கும். நீங்களும் அதிலிருந்து மீள்வீர்கள்.
No comments:
Post a Comment