இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, January 9, 2011

என்னைப்போல யாராவது இருந்தால் !!! (0901 2011)

என்னை நான் வெறுத்துத் தள்ளி நிற்கும் சமயத்தில் மனம் சோர்ந்து எதிலும் இல்லாமல் விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும் மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்.ஆனால் ஏதோ ஒரு இசை மாத்திரம் என்னைத் தனிமையாக்காமல் சூழ்ந்து நிற்கும்.

ஆழ யோசித்தால் .... நான் ஏன் இப்படி.இன்பமும்,துன்பமும்,இழப்புக்களும் எனக்கு மட்டும்தானா.என்னைவிட இயலாதவர்கள்...இழப்பையே வாழ்வாக வாழும் எத்தனை பேர் உலகில்.

இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை.என் வாழ்க்கையை யாரும் வாழமுடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.

வாழ்வு தளம்புவதும்,உறவுகள் பிரிவதும்,இல்லாமையும்,வறுமையும் இவற்றால் வரும் கஸ்டங்களும் இயல்பானதே.ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்.நான் மட்டும்தான் வேதனையோடும் விரக்தியோடும் வாழ்கிறேன் என்பது கொஞ்சம் என் அறிவீனத்தைச் சொல்லாமல் சொல்கிறது.இவையில்லாவிட்டால் வாழ்வின் சுவையும் குறைந்துவிடுமோ என்பதாயும் இருக்கிறது.

எத்தனையோ இழப்புக்கள் வேதனைகள் பிரிவுகளைத் தாங்கியபோதும் சில பிரிவுகள் சில இழப்புக்கள் மனதோடு கலந்துகிடப்பவை.காயங்கள் மாறினாலும் அவை வடுக்களாக அப்பப்போ கைகளுக்கு தட்டுப்பட்ட்டு ஞாபகங்களை கிளறிப் புதைத்து,எரித்து,பின் அணையாத தனலாகத் தகித்துக்கொண்டிருப்பவை.

இப்போதெல்லாம் இன்னும்...இன்னும் வலிகளை வேதனைகளைத் தாங்கக்கூடிய பக்குவத்தையடைய முயல்கிறேன்.என்னால் உணரமுடிகிறது.என் தலை நிறைந்த பாரங்களாய் என் வேதனைகள்தான்.சந்தோஷமான நேரங்களில் உடம்பின் உற்சாகம் கூடிநிற்பதும் கவலையான சமயங்களின் உடம்பின் சக்தியே குறைந்து கூடாய்க்கிடப்பதையும் உணர்கிறேன்.கவலைகள் மறக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறேன்.தூரவே இருக்கும்படியாகக் கட்டளையிடுகிறேன்.

இன்னும்...இன்னும் வாசிப்பதையும் கேட்பதையும் அதிகமாக்குகிறேன்.
தேவையான தேடுதலில் கவனம் செலுத்துகிறேன்.ஒருவேளை நான் கூடுதலாகப் பேசுகிறேனோ என்கூட நினைக்கிறேன்.அர்த்தமற்ற ஆசைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறேனோ.எல்லா வேதனைகளுக்கும் காரணம் நானேதானோ.ஒரு வரையறையின்றி பறந்து திரியாமல் எனக்கென்ற சில கட்டுப்பாடுகள், கோடுகள் போட்டு அதற்குள் என் எண்ணங்களை ஆசைகளை அடுக்கி வைத்திருக்கிறேனோ.

விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.எனதென்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமேயில்லை.உலகம் தாண்டிப் போனால் பிரபஞ்சம்.அதையும் கடந்து போனால்...சிந்தனைகள் குறைந்ததாலேயே தாமதங்கள் வாழ்வில்.என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.

அன்பைக்கூட அளவோடு பெற்றும்...கொடுத்தம் இருந்திருக்கவேண்டும்.
இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.சாப்பிடும் சாப்பாட்டுக்கு அளவும் கலோரியும் நினைக்கும் நான்...ஏன் உணர்வுகளுக்கு மாத்திரம் அளவை அதிகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

என்றுமே நான் அடுத்தவர்கள் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததில்லை.ஆனால் என் மனதிற்கு பிடித்தமான மாதிரி வாழ ஆசைப்பட்டிருக்கிறேன்.அதேசமயம் என்னால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழவும், மனதுக்கு ஒப்பாத,மனச்சாட்சி தவறியும் வாழ நினைத்ததில்லை.

வாழ்வு அற்புதமாய் அழகாய் இருக்கிறது இப்போதெல்லாம்.
எண்ணிக்கையோடு வாழ்வதைவிட எண்ணிக் கை நிறையக் கொடுத்து உதவி வாழ்வதில் எத்தனை சந்தோஷம்.உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.

மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.

No comments:

Post a Comment