இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Friday, January 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு!! பிரச்சினைக்கு முடிவு!!(1401 2011)


இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”

(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)



தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?

தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’
‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’

அந்தத் தினம் தான் எது?

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

No comments:

Post a Comment