இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, March 24, 2011

ப்ரியமானவள்..! (2403 2011)

நீ எப்படி இருப்பாய் எந்த வடிவில் இருப்பாய் என்றெதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு பிடித்தவிதமாய்த்தான் இருப்பாய் என்றொரு கிளி மனமரத்தினடியில் இருந்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறது . அந்தக்கிளியிடம் உன்னைப்பற்றி கேட்கும்பொழுதெல்லாம் அவளொரு பேரழகி என்ற பதில் மட்டுமே சொல்கிறது. எனக்கே தெரியாத உன்னைப்பற்றி இந்த மனமரக்கிளி இப்படி அடித்து கூறுவதன் ரகசியம் விளங்கவில்லை என்றபொழுதும் பேரழகிக்கு மணவாளனாய் ஆகப்போவதை நினைத்து மனது வானவில்வண்ண விளக்காய் பூரித்துதான் போகிறது.

ஒரு வேளை இந்தக்கிளி கூறுவதெல்லாம் பொய்யாய் போய்விடுமோ என்று அஞ்சி நடுநிசி இரவுகளில் உறக்கம் கலைந்து விடுகிறது. உறக்கத்துடன் ஒரு பிரசங்கம் நடத்தி வெற்றி பெற்று வந்த கனவின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாய் ஒரு புதிருடன் ஆரம்பித்தது. கனவின் புதிராய் நீ முக மூடியணிந்து என் மீது நீல நிற உடையுடுத்தி படர்ந்திருக்கிறாய், என் முதுகுப்புறம் சில வளர்பிறை நிலவுகள் புதிதாய் உதயமாகியிருக்கின்றன, முகத்தில் முழுநிலவுகள் இரண்டு உன்னிலிருந்து என்னில் இடம் மாறியிருக்கின்றன. இதையெல்லாம் மறுநாள் காலை என் வீட்டு அழகப்பன் என்னிடம் காட்டியபொழுது என் மீசைக்குள் வெட்கம் குடிகொண்டது. இவ்வளவு நடந்தும் எனக்கான உன் முகத்தை காணவே முடியவில்லை என்ற பொழுது மீசையிலிருந்த வெட்கத்தை துரத்தி துயரம் குடிகொண்டது, கனவும் கலைந்தது.

முன்தினம் வந்த கனவை பற்றியும் உன்னை பற்றியும் எப்பொழுதும்போல் வண்ணத்துப்பூச்சியிடம் பகிர்ந்துகொண்டபொழுது, கவலைப்படாதே உன் ஆசைக்குரியவளை நான் காட்டுகிறேன் என்னுடன் வா என்று என்னை ஒரு பூங்காவனத்திற்கு அழைத்துச்சென்றது. பூங்காவனத்தில் புதுமலர்கள் பூத்துகுலுங்கி கொண்டிருந்தன ஒரே ஒரு மலர் மட்டும் பூத்து சிரித்துக்கொண்டிருந்தது அது என்ன மலரென்று பார்ப்போமென்று அருகில் சென்றால் அது நீ, எப்பொழுதுபோலவே முகம் காட்டாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாய் நீ. அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியோ உன்னைக்காட்டி இவள்தான் உன் தேவதைப்பூ எடுத்துக்கொள் என்றது, முதல் முறை ஒரு மலர் எப்படி வெட்கப்படும் என்பதை நீ விளங்க வைத்துக்கொண்டிருந்தாய், சில நொடிகளில் மாயமாய் மறைந்தும் போனாய்.


இந்த முறை உன்னைப்பற்றிய ஏமாற்றம் விரக்தி இரண்டும் பன்மடங்கு பெருகியது . சதா சர்வ காலமும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் முகத்தில் ரோமங்கள் தன் உச்சகட்ட வளர்ச்சியை காட்டி என்னை நோயுற்றவனாய் காட்டிக்கொண்டிருந்தது. நோய் முற்றிய நிலையிலிருப்பவானாய் நினைத்து, என்னை பார்த்து பரிதாபப்பட்ட காதல் வைத்தியன் ஒருவன் வந்து என்னை கைத்தாங்கலாய் நீயிருக்கும் பூவனதேசத்திற்கு அழைத்துச்சென்றான். இம்முறை நீ உன் சக தோழியருடன் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தாய் , லாவகமாய் பந்தை யாரிடமும் கொடுத்துவிடாமல் வலைக்குள் நீ அடித்த நேரம் சரியாய் என் உச்சி மண்டையில் நங்கென்று வலித்தது, வலைக்குள் விழுந்த பந்தை உற்றுப்பார்த்தபோது நீ விளையாடிக்கொண்டிருந்த கால்பந்து என் தலையாகவா இருக்க வேண்டும்?, நீ ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருக்கிறாய் உடன் வந்த காதல் வைத்தியன் ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருந்தான் பிறகுதான் தெரிந்தது அவன் உன்னால் நியமிக்கப்பட்ட காதல்தொண்டன் என்று.

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் எதுவுமே பேசாமல் கிறுக்கு பிடித்து திரிவதை விட உன்னிடமே உன்னைப்பற்றி கேட்டுவிடலாமென்று தைரியமாக உன் அருகில் வந்து ஏய் கந்தர்வப்பெண்ணே யார் நீ என்றதும், சட்டென்று திரும்பி பார்த்த நீ மெல்லிய புன்னகையை பதிலாய் தந்துவிட்டு சிறிது தூரம் சென்றது ஒரு காகிதப்பந்தை என்னிடம் விசிறிவிட்டு சென்றாய். பித்து பிடித்த மனம் ஆவலாய் அதைப்பிரித்து படித்தது , அதில்

ப்ரியமானவனே..


உனக்கென்று பிறந்தவளே நான் உன்னை அடைவதற்கு முன் இந்த மலர் வனதேசத்திலிருக்கும் மலர்களின் தோழியாய் சிலகாலம் நியமிக்கப்பட்டிருக்கிறேன் இந்த மலர்களின் மனத்தையெல்லாம் வென்று அவற்றின் நறுமணத்தையும், அழகையும், பொறுமையையும், எனக்குள் உள்வாங்கி அழகும் வனப்பும் மிகுந்த பேரழகியாய் மாறியதும் உன்னிடம் வந்து உன் துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவேன் , அதுவரை இப்படி கிளியிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும் பேசிக்கொண்டு அரைப்பைத்தியமாய்த் திரியாமல், என்னை அடக்கி ஆளும் வலுக்களை உனக்குள் தயார்படுத்தி வை , உடம்பிற்குள் ஒராயிரம் தினவை புதைத்து வை நான் வந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கிறேன், உன் வீட்டிலிருக்கும் மலர்களிடம் சொல்லிவை அவைகளின் தோழி ஒருத்தி வரப்போகிறாளென்று, உன் வீட்டாரிடம் சொல்லிவை அவர்களின் மனத்தை ஆளப்போகும் இளவரசி வரப்போகிறாளென்று, அதுவரை சமர்த்தா இருக்கணும் இளவரசே....



ப்ரியமானவள்..

No comments:

Post a Comment