இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Saturday, March 26, 2011

கிராமத்தாய்ங்கதான் நாங்க...! (2603 2011)


















அட கூட்டம் கூட்டமா சுத்திகிட்டு இருந்த பயலுகப்பா நாங்க....! நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்க.. டவுனுக்கு வந்து டைய கட்டிகிட்டு டஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு பேசுறோம்னு பாத்தியா ! அட இது எல்லாம் வேல வெட்டினு வந்ததுக்கு அப்புறமப்பா.. ...! ஊருக்கு பக்கட்டு வந்து பாரு....எப்டி இருக்கோம்னு....

காடு, கரை, வயலு, வாய்க்கா, சேறு, சகதி, வெயிலுன்னு ஒரு மார்க்கமா வாழ்ந்திருக்கோமப்பா....! பாட்டன் முப்பாட்டன்னு மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்ச பயலுக நாங்க...! அப்டிதானே இருதிருப்பாய்ங்க நெறய ஆளுக....! அட வாழ்க்கை மாத்திபுடிச்சப்பா அம்புட்டையும்....! இங்குட்டு பொழப்பு தலப்ப தேடி வந்தாலும் சாதி சனத்த விட்டுபுட்டு இருக்கமாட்டமப்பா நாங்க....! கோவிலு, திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு ஒண்ணு மண்ணுமா சேராம இருக்க மாட்டமப்பா...!

வெள்ளன நாங்க எந்திருக்கிறதுக்கு முன்னாடி ஆடு மாடுகளும், கோழி, சாவல்களும் எழுப்பி விட்டுறுமப்பா எங்கள...! கோழிபெட்டிய எங்கப்பத்தா தொறந்து விட்டா கெக்கரிச்சுகிட்டு போகும்யா அம்புட்டும்ம்ம் நாந்தேன் எப்பவோ கூவிட்டேனேன்னு விடிஞ்சது எனக்குதானே முதல்ல தெரியும்னு திமிரா போகும் பாரு அந்த கருத்த சாவ...! வெள்ளன எந்திரிச்ச திமிறுல்ல நாளு முழுசும் திமிராவே தெரியும்ல...! எங்கய்யா சொல்லுவாரு வெள்ளன எந்திரிச்சா மனுசன் கூட திமிராத் திரியலாம்னு..!

மாடுகளுக்கு எல்லாம் வைக்ககொலைய வைக்கப்பொடப்புல இருந்து அள்ளிகிட்டு வரும்போது வந்துரும்யா சந்தோசம் என் காளைக் கண்டுகளுக்கு...! வைக்கலை போட்டு தின்னு முடிக்கவும் கழனித் தண்ணிக்கு போயி தண்ணி காட்டிகிட்டு இருக்கும் போதே.. காப்பித்தணிய ஊத்திகிட்டு வந்துரும் எங்கப்பத்தா.... ! இப்பதான்ப்பு ஒங்க அத்தைகாரி பாலு பீச்சிகிட்டு இருக்கா... அப்புறமா பாலுகாப்பித் தாரேன் இப்போ வெரசா இந்த வரக்காப்பிய போட்டாந்தேன்னு அது காப்பியா ஆத்துற சுகத்துலயே ஒடம்புக்குள்ள ஒரு சுறுசுறுப்பு வந்துரும்யா...

பத்து ரூவா கொடுத்து பகட்டா இங்க ஓட்டல்ல கொடுக்குற காப்பித் தண்ணியெல்லாம் அட...நாண்டுகிட்டு இல்ல செத்து போகும்.எங்கப்பத்தா கொடுக்குற வரக்காப்பிய கண்டுச்சுனா..! ரொம்ப வெவராமத்தான்யா கணக்கு வழக்கு பாக்க ஊருக்கு ஒரு கணக்கு பிள்ளை, ஊர நிர்வாகம் பண்ண தலையாரின்னு வச்சுப்புட்டு பரம்பரை பரம்பரையா திரிஞ்சுருக்கோம் நாங்க...! இங்கிலீசு டாக்டரு எல்லாம் இப்பத்தானே வந்தாக....அந்த காலத்து வாழ்க்கைக்கு வைத்தியமே தேவையில்லையப்பா...!

மனிசன் இங்கிலீசு மருந்து கண்டு பிடிச்சு அம்புட்டு பக்கியலும் அதை எடுத்துகுற இந்தக் காலத்தில எல்லாம் 50 வயசு 60 வயசுக்குள்ள போயி சேந்திராய்ங்க...! எம் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஜவாப்பா 100 வயசு வரைக்கும் இருந்திருக்காய்ங்கள்ள.. ! வேலை வெட்டினு ஓடிகிட்டே இருப்பாய்ங்கள்ள அதுல திண்ட சோறு செரிச்சு போயி எல்லாமே சத்தா போயி இரும்பு மாதிரி இருப்பாய்ங்கப்பா...

நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு....

காலையில எங்கய்யா வெள்ளாம காட்டுக்கு போவுறதுக்கும் முன்னால கூழு குடிப்பாக....! கூழை கரச்சு லோட்டால அடிச்சு ஆத்தி ...வாளைபூ சர்வம் மாறி இருக்குற பெரிய செம்புல ரெண்டு செம்பு குடிக்கும் போதே இந்தக் கையில சின்ன வெங்காயம் சிரிச்சிகிட்டு இருக்கும், அதே நேரத்துல எங்கய்யா வவுறு நெறயிற சொகத்துல எங்கப்பத்தா மனசு நெறஞ்சு கிடக்கும் குளுமையில் கொட்டுன நெல்லு மாதிரி.

இரண்டு பொண்டாட்டி கட்டுறது எல்லாம் அப்பம் சகசமான ஒண்ணுதேன்....! சொத்து விட்டு போகக்கூடாதுன்னு அக்காளுந் தங்கச்சியுமே ஒருத்தனுக்கு கட்டி வச்ச கதையெல்லாம் சகசம். அதுண்டு இல்ல அறுத்து கட்டுறதும் அம்ம வம்முசா வழில சகசந்தேன்... ! பின்னே இளாந்தாரி புள்ளைக புருசன் இல்லாம தனியா வாழணுமுல்ல...! இது புருசங்காரன் செத்தா தாண்டு இல்லப்பு....! சரியில்லாத புருசனா இருந்தாலும் சத்தமில்லாம பஞ்சாயத்துல வச்சி தீத்து விட்டுருவகா....

அம்புட்டு சுளுவா ஒண்ணும் செஞ்சுற மாட்டாக..அதுலயும் பல மொற இருக்குல்ல....! படார்னு தீத்துவிட்டுப்புட்டு..வேட்டிய ஒதரிக்கிட்டு போய்ற மாட்டாய்ங்க...! பஞ்சாயத்து தலைவரே தீர்ப்பு சொல்லி முடிச்சாலும் தப்புன்னு தெரிஞ்சா விடாதுய்யா ஊரு சனம்...எதுத்து கேள்வி கேக்கும்ல...! இப்புடி ஊருசனம் மாத்தி எழுதி வச்ச பஞ்சாயத்துக கொள்ளை இருக்கு..


கிராமத்தாய்ங்க தீர்ப்புன்னு அம்புட்டு சுளுவு இல்லப்பு..! எம்புட்டு சனம் சேந்தி வந்தாலும் மொத்த சனமும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிம். சூது வாது தெறியாத மக்க ஒரு சொம்பு தண்ணிய கேட்டியன்னா...இருந்து ரெண்டு நாளு சாப்பிட்டு போங்கப்புன்னு விசனம் இல்லாம சொல்லுவாய்ங்க....

பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...

அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...

மத்த படிக்கி உள்ளுக்குள்ள எங்கூரு கருப்பன் சத்தியமா....அட கருப்பன், வீரனாரு எல்லாம் யாருன்னு சொல்லிப்புடுறேன்...? அவுக எல்லாம் அந்த அந்த ஊருக்கு பிரச்சினைனு வந்தப்ப உசுர கொடுத்த புண்ணியவானுக...காலம் வேகமா ஓட ஓட..அல்லாரையும் சாமியாகிபுடிச்சு எஞ்சனம்..ஆனா.....அவுகள மனசுல நினைச்சுகிட்ட ஒரு வீரமும் தெம்பும் எங்கிட்டு இருந்துதேன் கெடைக்கிதோ....

சரி...ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன்..........ஒத்த வரில சொல்லிபுடுறேன்........! கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளி...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

No comments:

Post a Comment