Wednesday, August 25, 2010
திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியமா? (25/08/2010)
திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை ஆண் பெண் இருவருக்கும் அவசியமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்றே கூறுவேன். திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என்பதை முன் கூட்டியே அறியலாம்.
இன்று நிறைய ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறியாமல் திருமணத் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பின் அவர்களுக்கு இருக்கும் நோய் அறிகுறி தெரியவந்தால் இருவருக்குமே அந்த வாழ்க்கை நிலையும் இல்லை, நிம்மதியும் இல்லை. இருவர் குடும்பதிற்கும் ஊர் உலகத்தில் அவப்பெயர்தான். திருமணம் நிச்சயம் ஆவதற்கு முன் ஆணும் பெண்ணும் தங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு இன்று நம் வீட்டில் அனுமதிக்கின்றனர் அது போல் ஆண், பெண் ஜாதகத்துடன் பரிசோதனை சான்றிதழையும் இணைக்கலாம் என்பது என் கருத்து. இது நடக்கக் கூடிய காரியமா என்றால் நிச்சயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பட்டால் தான் புரியும். எப்போதும் நாம் ஒரு வேதனையையோ, சந்தோசத்தையோ அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும். அதுபோல் வேதனையையும், வலியையும் நான் அனுபவித்ததால் தான் என் வேதனையையும் வலியையும் உங்களுடன் பகிர்கிறேன். இதை பதிவாக்கும் போது பலர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் இதை படித்த ஒருவர் ஆண் அல்லது பெண் வீட்டில் இரத்தப்பரிசோதனை சான்றிதழ் கேட்டாலே பயன் தான் என்று நினைத்து எழுதுகிறேன்.
ஒரு நண்பனின் தங்கைக்கு நேர்ந்த சோகம் :-
நண்பன் என்னை அழைத்து சொன்ன விசயம் தங்கைக்கு 20 வயதில் திருமணம் முடித்தோம் மூன்று மாதம் தான் குடும்பம் நடத்தினாள் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக எங்க கூட தான் இருக்கிறோள். அவளுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் இந்நிலையில் அவள் முதல் கணவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவர் இறந்தது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினால் என்று சொல்றாங்க தங்கை அவன் கூட வாழ்ந்ததால் தங்கைக்கு பரிசோதனை செய்யலாமா? திருமண ஏற்பாடு நடக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டான் நான் நிச்சயம் இரத்தப்பரிசோதனை எதற்கும் செய்து கொள்ளலாம் என்றேன். எங்கள் ஊரில் பரிசோதனை செய்தால் ஊர் எல்லாம் தெரிந்து விடும் எனக் கூற நான் இங்கே வந்து விடு என்றேன். இங்கு பரிசோதனை செய்தோம் ஒரு பத்து வருடத்திற்கு அப்புறம் அன்றுதான் தங்கையைப் பார்த்தேன். பரிசோதனை முடித்து விட்டு 3 மணிக்கு சென்று பரிசோதனை விவரத்தைப் பார்த்தால் பாசிட்டிவ் என்று இருந்தது என் கையால் வாங்கி அதைப்பார்த்த உடன் என்ன செய்வது என்று தெரியாமல் என் கண் கலங்கியது.
நண்பனை மட்டும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டு தங்கையிடம் இன்னும் 2 நாள் ஆகுமாம் , அதன் பின் சொல்கிறார்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்ன செய்வது இன்று வரை சொல்லவில்லை. புதிதாக பார்த்த மாப்பிள்ளையிடம் தங்கை உங்களை பிடிக்கவில்லை என்று கூறி அவரை வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டதாக சொன்னான்.
வாழ்க்கையில் மறக்கக முடியாத தருணம் அது எத்தனையோ நல்லது கெட்டது செய்திருந்தாலும் அந்த பரிசோதனை விபரத்தை என் கையில் வாங்கி கண்ணீர் விட்டதை எப்படி மறப்பது தூக்கமில்லாமல் தவிக்கிறேன் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது. மருந்து மாத்திரை எங்கு வாங்குவது என்று ஒவ்வொன்றாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். 22 வயதுப் பெண் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என் நண்பன் தங்கை என்பதால் மனது அடித்துக்கொள்கிறது. இத்தனை நாள் எத்தனையோ முகம் தெரியாதவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இப்போது தான் வலியை உணர்கிறேன். நமக்கு பக்கத்தில் நடக்கும் போது தான் உரைக்கிறது. இது போல் விபரம் தெரியாமல் இன்று நம் ஊரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனவலி மனவேதனை நினைத்தாலே கண்ணீர் தான்.
இனி வரும் காலங்களில் திருமணத்தின் போது பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என அனைவரும் கேட்க வேண்டும். நாம் கேட்கவில்லை என்றாலும் அரசாங்கம் கேட்கும் படியான சட்டம் இயற்றலாம். திருமண பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. திருமணம் பதியும் போது இருவரது உடல் பரிசோதனை சான்றிதழ் நிச்சயம் வேண்டும் என்று அரசு சட்டமியற்றினால் பல அப்பாவிகள் இந்நோயில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு உண்டு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment