இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Monday, August 30, 2010

குழந்தைகளின் உலகம்... அன்றும்! இன்றும்! (30/08/2010)

இன்று உலகில் எல்லாமே நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பிரச்சனைகள், சிக்கல்கள் இன்றி எவர் வாழ்வும் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகளின் வாழ்க்கையையும் கூட, நம் ஆசைகளின் காரணமாய் நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

பரிட்சை சமயங்களில், ஏதாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் வாசலில் நின்றால், இந்த வாக்கியங்கள் காதில் விழுவதை தவிர்க்க இயலாது. "பஸ்ட் ராங்க் வாங்கு. உனக்கு சைக்கிள் வாங்கி தர்றேன்". இருபது மாணவர்கள் படிக்கும் வகுப்பில், இருபது பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று கனவு. ஆனால் யாரோ ஒரு பிள்ளையே முதல் ராங்க் வாங்குகிறது. ஏனைய பெற்றோர்களுக்கு ஏமாற்றம். விளைவு. பிள்ளைகள் மீது கோபம் கொப்பளிக்கிறது.

"கேட்கறதெல்லாம் வாங்கி தர்றேன் சனியனே. படிக்க மாட்டேங்கிறே" என்ற குழந்தைகளுக்கு திட்டு. குழந்தைகளுக்கு நிச்சயம் தெரியாது. பெற்றோர்கள் தான் கேட்பதை எல்லாம் வாங்கி தருவது, ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் விளைவாகத் தான் என்பது. "எங்க காலத்துல இப்படியா வாங்கி கொடுத்தாங்க. உனக்கு எல்லாம் வாங்கி தர்றேன். படிக்கிறதுக்கு என்ன கேடு வந்துச்சு" என்று சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். உண்மை தான்.

இந்த தலைமுறை குழந்தைக்கு என்ன கிடைக்கவில்லை. சென்ற தலைமுறைக்கு முந்திய தலைமுறை குழந்தைகளுக்கு எதுவும் கிடைத்ததில்லை. சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு கேட்டால் மாத்திரம் கிடைத்தது. ஆனால் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கேட்காமலே எல்லாம் கிடைக்கிறது. சென்ற தலைமுறையில் நான்கு குழந்தைகளுக்கு செய்த செலவை காட்டிலும், அதிகமாய் இன்று ஒரே குழந்தைக்கு செய்கிறார்கள். நான்கு குழந்தைகளுக்கான கொஞ்சலும் இன்று ஒரே குழந்தைக்கான கொஞ்சலாகி விட்டது.நான்கு குழந்தைகள் சாப்பிட்ட சாப்பாட்டை இன்று ஒரு குழந்தையாக சாப்பிடுகிறது.

வருஷத்திற்கு இரண்டு புது டிரஸ்கள் என்பது மாறி, வருஷத்திற்கு ஏழெட்டு புது டிரஸ்கள்... நிச்சயம் இந்த தலைமுறை குழந்தைகள்
அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால்... இதில் ஒரே ஒரு ஜீரணிக்கவே முடியாத
கஷ்டமான உண்மை என்னவென்றால் - அன்று நான்கு குழந்தைகள் வாங்கிய திட்டையும், அடியையும் இன்று ஒரு குழந்தையே வாங்குகிறது. இன்று பதிமூன்று வயது குழந்தைக்கு தற்கொலை சிந்தனை வர என்ன காரணம்.

அன்று நான்கில், ரெண்டு குழந்தைகள் சரியாக படிக்காமல் போனால், அதனால் எந்த பெற்றோரும் கவலைப்பட்டதில்லை. படி படி என்று நிர்ப்பந்திக்கப்பட்டதில்லை. "படிச்சா படிக்கிறான். இல்ல கடைய பார்த்துக்கட்டும். அப்பன் தொழிலை பார்க்க ஒருத்தன் வேணாம்மா" என்று, சரியாக படிக்காத குழந்தையை குலத் தொழிலுக்கென்று ஒதுக்கி விட்டார்கள். இன்று ஒரே குழந்தை. அது சரியாக படிக்காமல் போனால்...

மேலும் இப்போதெல்லாம் பேரண்ட்ஸ் மீட்டிங், ஒபன் ஹவுஸ் என்று நிறைய இம்சைகள். பெற்றோர்கள் அவசியம் பள்ளிக்கு வந்தாக வேண்டும். நன்றாக படிக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்று அறியப்படும்
பெருமையை பெற எல்லோரும் நினைக்கிறார்கள். சுமாராக படிக்கின்ற
குழந்தைகளின் பெற்றோர் என்று அடையாளப்படுத்த படுவதை நிச்சயம்
வெறுக்கிறார்கள். குழந்தைகளின் பாடப் புத்தகத்தை பார்த்தால் தலை சுத்துகிறது. குழந்தைகளின் கம்ப்யூட்டர் புக்கில் உள்ள ஒன்று கூட நமக்கு
தெரியாது.

இத்தனையையும் அந்த சின்ன மூளை எப்படி தான் உள் வாங்க
போகிறதோ. இதில் படிப்பை தாண்டி வேறு வேறு எதிர்பார்ப்புகள்
பெற்றோர்களுக்கு. தொலைக்காட்சிகளில் சிறுவர் சிறுமிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும். எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள். ஆசை தூண்டல்கள். நேற்று தொலைக்காட்சியில் ஒரு விசித்திரத்தை பார்த்தேன். ஒருவர் தன் இரண்டு கைகளாலும், காந்தியடிகளின் படத்தை வரைகிறார். வலது கை ஒரு கண்ணை வரைகிறது. இடது கை மறு கண்ணை வரைகிறது. ஒரு இயந்திரம் போல் இயங்கினார்.

இம்மாதிரியான திறமை அமையப் பெற்று இருந்தால் மகிழ்ச்சி.
அமையாமல் போனால், அதனால் ஒரு பாதகமும் இல்லை. இதை பார்த்து, தங்கள் குழந்தைகளை சாதனை குழந்தைகளோடு எத்தனை எத்தனை ஒப்பிடல்கள். நான் வெறுக்கக் கூடிய முக்கியமான ஒன்று... ஒப்பிடல். ஒப்பிடலை. சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வேறு குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை ஒரு சுபாவமாகவே வைத்து இருப்பார்கள்.

நான், "அப்படி ஒப்பிடாதிங்க. அந்த குழந்தை, உங்களை வேறு பெரியவர்களோட ஒப்பிட்டுட்டு பேசிட்டா உங்க நிலைமை என்னாகும். கோபம் வரும்லயா. அடிக்க கைய ஓங்குவிங்கல" என்று கேட்பேன்.

அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இன்றைய சூழல் வரமாக தான் உள்ளது. சற்றே துடிப்பு திறன் குறைந்த குழந்தைகளுக்கு, இந்த சூழல் சாபமாகவும், பயங்கரமானதாகவும் உள்ளது. அச்சத்தினுடே தான் அது பயணப்பட வேண்டி உள்ளது. பெரியவர்களுக்கும் இது பொருந்த கூடிய ஒன்று தான்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. நாம் வம்பை, சிக்கலை, துயரத்தை விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அழகான குழந்தைகளின் உலகத்தை, நம் ஆசைகளினால் மாசுப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment