துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.
துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.
துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
குறள்:
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!
No comments:
Post a Comment