இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Monday, August 30, 2010

வாழ்க்கை - அன்றும்! இன்றும்!!(30/08/2010)

எல்லாமே இயந்திரமாகிப் போன இன்றைய காலகட்டத்தில் நாம் இயங்குவது வெகு அபூர்வமாகிப் போய்விட்டது.அலுவலகப் பணியாகட்டும் இல்லை அடுக்களை பணியாகட்டும் இல்லை நம் அன்றாட பணியாகட்டும் எதற்கும் தயாராக இருக்கிறது இயந்திரங்கள்.

கடிகாரம் அல்லது மொபைலில் அலாறம் என்ற பெயரில் அலறுதலில் காலையிலேயே தொடங்குகிற இயந்திரத்தின் பயன்பாடு ட்ரெட்மில், வாக்கும் க்ளீனர், வாஷிங் மெஷின், குக்கர், மிக்சி, கார், பைக், கம்ப்யூட்டர் என தொடர்கிறது.

அதிகாலையில் ஆசுவாசமாக இயற்கையின் அழகை ரசித்தபடி வெளியே ஓடுவதையோ நடப்பதையோ இன்று பலர் விரும்புவதில்லை. ட்ரெட்மில் இருக்கிறப்போ வெளியே ஏன் போறோம்; குக்கரும், மிக்சியும் சமையலை எளிதாக்குகையில் மண் சட்டியும், அம்மியும் என்னத்திற்கு. காரும், பைக்கும் இருக்கையில் நடப்பதும் ஓடுவதும் எதற்கு என்ற ரீதியில் தான் இன்றைய நிலைமை இருக்கிறது.

இப்படி படிப்படியாக உடலுக்கு அதிகம் உளைச்சல் தராத பலப்பல இயந்திரங்களை நம்பியே வாழ்ந்து விட்டோம் தொடர்ந்து வாழ்ந்தும் வருகிறோம்.

ஒருபுறம் இயந்திரங்கள் பெருகப் பெருக நம் உடலான இயந்திரம் நம்மை அறியாமலே சிறுமை அடைவது தான் நம்மில் பலரும் அறியாத உண்மை. அத்தனை எளிதில் தொற்றாத வியாதிகளும், புதுப் புது வியாதிகளும் நம் முன் வியாபித்திருப்பதை சகஜமாக காண முடிகிறது. நாற்பது வருடங்கள் முன்னர் இந்த நிலைமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருவரின் சராசரி வாழ்நாள் 65 வருடங்கள் என்றிருந்த காலம் மாறி இன்று 45 ஆகி நிற்பதற்கு இந்த இயந்திரங்களும் இயந்திரம் போன்ற வாழ்க்கையும் தான் காரணம் என்றாலும் மிகையல்ல.

22 கிலோமீட்டர் தொலைவு சர்வ சாதாரணமாக மிதிவிண்டி மிதித்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒருவரால் வர முடியுமா என்ற ஆச்சரியத்துடன் இருபது வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். அதே போன்று திரும்பிச் செல்ல 22 கி.மீ மிதிவிண்டி செலுத்தியாக வேண்டும்.

எனது சிதப்பாவான திரு.கருணாநிதி , ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் தினமும் சீர்காழியில் இருந்து பூம்புகார் வரை 22 கி.மீ மிதிவண்டியில் சென்று வருவார்கள் .ஆகா ஒரு நாளைக்கு சராசரியாக 44 கி.மீ பயணம் செய்வார்கள் . இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும் . இன்றைய இளவட்டம் 5 கி.மீ பயணம் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

அன்று வியர்வை சிந்த உழைத்தார்கள்; நன்றாய் உணவருந்தினார்கள். உற்சாகமாய் நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள். இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில் உடல் உழைப்பு என்பது குறுகிப் போனது ஆனால் சாப்பாட்டில் மட்டும் எவரும் எந்த குறையும் வைப்பதில்லை. அருந்திய உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாததால் கேள்விப்படாத வியாதிகளும் எளிதில் ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

உடல் உழைப்பை விட மன உழைப்பு அதிகமாகிப் போனது இன்று. எப்போதும் பணம், பங்கு என்ற சிந்தனைகளால் மனதை சிதைத்துக் கொண்டிருப்பதும் ஒருவகையில் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பணம் மற்றும் பங்கிற்கு அப்பால் பந்தங்களும் உண்டு என்பதை நினைவுகூர்ந்து இயந்திரங்களை மட்டுமே நம்பாமல் உடல் உழைப்பையும் ஊக்குவித்தால் உடலும், உள்ளமும் நலம்பெறும் என்பது திண்ணமே.

No comments:

Post a Comment