கடவுள் ஒரு சௌகரியம். வருந்தினால் புலம்ப, அஞ்சினால் அடைக்கலம் தேட, அனுதினம் ஒரு கட்டுப்பாட்டுக்கு உதவ... என்று பலவிதங்களில் பயன்பட்டாலும் கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது.
பிறந்த குடும்பத்தின் பழக்கங்களுக்கு உட்பட்டோ, கேட்கும் கதைகளால் வசீகரிக்கப்பட்டோ இல்லை எதிர்பாராதும் புரிபடாதுமான அனுபவத்தால் உந்தப்பட்டோதான் கடவுள் நமக்கெல்லாம் அறிமுகம். சூழலாக இருந்தாலும் சரி, சுகமானதென்றாலும் சரி, கடவுள் ஒரு சௌகரியம் தான். உலகம் தட்டை, ஆப்பிள் கடித்ததால்தான் மனிதன் பல்லாண்டுகளாகக் கஷ்டப்படுகிறான், நாளும் கோளும் எல்லாம் செய்யும், நாளை நன்றாய்ப் பிறப்பாய் அல்லது பிறக்க மாட்டாய்...இப்படியே சொல்லக்கற்றுக்கொண்டவை யாவுமே அந்தந்த காலத்தின் சௌகரியம்தான். அறிவியல் சௌகரியமாக அறிமுகமாவதில்லை ஆனால் அறிவு சௌகரியம். அது இருட்டில் ஒரு விளக்கை ஒளி கூட்ட உதவும். ஆனால் கடவுள் பொதுவாகவே அறிவை விட மனதுக்கே நெருக்கம். இந்த நெருக்கம் அவசியம். இந்த நெருக்கம்தான் சௌகரியம்.
கடவுள் அவனா அவளா? ஹனுமானும் ராவும் மனித உருவில் இல்லாவிட்டாலும் கடவுள், ஆனால் மனித உருவில் உள்ள கடவுளர்க்கே இங்கே அங்கீகாரம் அதிகம். மனித உரு என்று வந்துவிட்டால் அப்படியே அச்சாக ஆக்குவதைவிட அதீதங்களை அடுக்குவதில்தான் பிம்பங்கள் பிரகாசம் அடைகின்றன, அதனாலேயே நான்கிலிருந்து ஆயிரம் கைகள், பல தலைகள். இடுப்பிற்குக் கீழே ஏன் அதீதங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்! மூன்றாவது கால் வைத்தால் கூட அது மனிதனாய் நிற்காது என்பதால் தான். மச்சமும் வராகமும் அவதாரம் என்றே சொன்னாலும் அவை நிற்கும் வடிவில்தான் காட்டப்படுகின்றன. மனிதனின் கடவுளுக்கு மனிதனைப்போல் நிற்க இரண்டு கால்கள் அவசியம்!
மனிதனைப்போலவே உருவாக்கப்பட்ட கடவுளுக்கு மனிதனைப்போலவே கோபம் க்ரோதம் எல்லாமும் இருக்கும். கடவுள் படைத்ததாய்ச் சொல்லப்படும் மனிதன் படைத்த கடவுள், அவனைப்போலவே இருப்பதுதான் அவனுக்கும் சௌகரியம். அப்போதுதான் அதனிடம் கெஞ்சவும் முடியும், லஞ்சம் பேசவும் முடியும்!
இப்படியொரு கற்பனை எதற்கு என்று அறிவு கேட்டவுடன், அந்த அறிவை ஏற்று அதன்வழியே தன்னையே அமைத்துக்கொள்ளப் பழகிவிட்ட மனம், இதில் தர்க்க ரீதியான தனக்கு சௌகரியமான முடிவைத் தேடியதின் விளைவுதான்-
"1 எனும் அத்வைதம், 1+ எனும் த்வைதம்,1-0+x எனும் விஸிஷ்தாத்வைதம். இதில் எந்தக் கணக்கும் ஒத்துவராதவர்களுக்கு இரண்டு விடைகளுள் தேர்வு செய்யும் சௌகரியம் உண்டு. 0 தான் விடை என்று சொல்லிவிடலாம். 0 என்பது நாத்திகம் எனும் மறுப்பா இல்லை சூன்யம் எனும் புரிதலா?"
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பானே” அவனா தெய்வம்? இல்லை, அவன் பூஜ்யம் எனும் இல்லாத ஒன்றா? பூஜ்யம் என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்; பூஜ்யம் இல்லாமல் போய்விடுமா?
பூஜ்யம், சூன்யம் என்பதையெல்லாம் விட ‘ஓம்’ என்பதற்கு மிகப்பெரிய வியப்புமதிப்பீடு ( ஓவர் பில்டப்?!) உண்டு. இந்த ஓம் பற்றி ஒரு கதை.
முருகன் சிவனின் மகன். சிவன் பெரிய கடவுள். சிவனுக்குச் சமம் என்றாலும் பிரம்மா சமம் இல்லை- தற்கால அரசியல் போல. (அன்பழகனும் ஸ்டாலினும் ஒன்றா?). முருகன் பிரம்மாவிடம் “ஹலோ நீர்தான் ஞானஸ்தராமே சொல்லும், பிரணவத்தின் பொருள் என்ன?” என்றானாம். அந்த மக்குக்கு விடை தெரியவில்லையாம். உடனே அதைச் சிறையில் வைத்துவிட்டானாம். எல்லா வல்லுனர்களும் நல்லவர்களும் (இன்றும் நடக்கும் சமாதானத் தூது(?) போல் சென்றும் வேலை ஆகவில்லை! சிவன் தானே தான் மகனுடன் பேச முடிவெடுத்தார், மகன் “நீ என் சிஷ்யனாய் வந்தால்தான் பிரணவத்திற்குப் பொருள் சொல்வேன்” என்றானாம். தலைவர் மகனுடன் விவாதிக்க முடியுமா, போனார், கேட்டார்- “ ஆமா, அந்த ஓம் என்பதற்கு என்னப்பா அர்த்தம்?”
மகன் சொன்ன பதில்- “ அது ஒன்னும்மில்லைப்பா!”
இந்த ஓம் கதையை சொன்னவர், ஜெயகாந்தன்.
No comments:
Post a Comment